வெள்ளி, அக்டோபர் 28, 2011

பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்.


وَأَقِيمُواْ الصَّلاَةَ وَآتُواْ الزَّكَاةَ وَمَا تُقَدِّمُواْ لأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللّهِ إِنَّ اللّهَ بِمَا
تَعْمَلُونَ بَصِيرٌ

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். 2: 110.

தொழுவதினால் ஏற்படும் நன்மைகள்




அல்லாஹ்வைத் தொழுவதினால் இம்மை, மறுமை இருவாழ்விலும் குவியும் ஏராளமான நன்மைளை கணக்கிட்டால் நம்மால் பட்டியலிட முடியாத அளவுக்கு அவைகள் நீண்டு கொண்டே செல்லும். 

இன்று நம்மில் பலர் தொழுகை விஷயத்தில் அலச்சியப்போக்கை கையாளுவதற்கு எது காரணமென்றுத் தெரியவில்லை ? ஒன்று அதனுடைய நன்மைகளைத் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்துகொண்டு அதில் நம்பிக்கை இழந்து இருக்கவேண்டும், இல்லை என்றால் பட்டியலிட முடியாத அளவுக்கு நன்மைகளை குவிக்கக்கூடிய தொழுகை விஷயத்தில் அலச்சியமாக இருக்க முடியாது. 

நம்மால் இயன்றவரை ஒரு நிணைவூட்டும் விதமாக தொழுவதினால் ஏற்படும் இம்மை,மறுமைப் பலன்களை எழுதுவோம்.

தொழுகையினுடைய அமல் என்பது பாங்கு ஒலிக்கத் தொடங்கியது முதல் தொடங்கி விடுகிறது. 

பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்.

தொழுகையாளிகளாகிய நாம் தொழுகைக்கான அழைப்பைக் கேட்கும்பொழுது அதற்காக பதில் கூறுகிறோம் அதற்கு நன்மை எழுதப்படுகிறது அத்துடன் அது நின்றுவிடாமல் இன்னும் தொடருகிறது. 

பாங்கிற்கு பதில்கூறி முடித்தப்பின் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதுகிறோம் அவ்வாறு ஓதப்படும்பொழுது ஒருமுறை ஓதினால் ஓதுபவர் மீது அல்லாஹ் பத்துமுறை அருள்புரிகிறான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள். 
ஒருமுறை ஓதுவதற்காக அல்லாஹ்வின் அருள்மழை பத்து முறை நம்மீது பொழிகிறதென்றால் அது சாதாரண விஷயமா ? இதைக் குறைத்து மதிப்பிட முடியுமா ? அல்லது இதற்கு ஒரு அளவுகோலை ஏற்படுத்திக் கொண்டு இந்தளவுக்கு நன்மை தான் இது என்று வறையருத்துக் கூறமுடியுமா ? அல்லாஹ்வின் அருள்மழை நம்மீது பொழிகிறதென்றால் அதற்கு அளவேக் கிடையாது எல்லையைத் தாண்டிய நன்மை அல்லவா இது. சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். 

நாளை என்ன நடக்குமோ ? அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ ? என்ற பீதியிலும், அச்சத்திலும் இன்று உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் உறைந்துப் போய் இருப்பதற்கு காரணம் அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் இலகுவான வழிகளை அடைத்துக் கொண்டது ஒருக் காரணமாகும். 

பாங்கிற்கு பதில் கூறிவிட்டு ஸலவாத் ஓதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அல்லாஹ்வின் அருள் நம்மீது இடைவிடாமல் இறங்கும் பொழுது அச்சமற்ற வாழ்வும், மனஅமைதியும் கிடைக்கும் இது உலக நன்மை. இது உலகில் வாழும்பொழுது ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவைப்படும் நன்மைகள். 


மறுமை நன்மை.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதி முடிந்ததும் அவர்களுக்காக சுவனத்தில் சங்கை மிகுந்த வசீலா எனும் உயர் பதவிக்காக பிரார்த்தனை செய்கிறோம், கண்மனி நாயகம்(ஸல்) அவர்கள் உலகில் வாழும்பொழுது அவர்களுக்காக என்று நம்மிடத்தில் எதையும் கேட்டதில்லை மாறாக நம்முடைய நேர்வழிக்காக அவர்களின் வசதியான வாழ்க்கையைத் துறந்து ஏழ்மையை தேர்வுசெய்து கொண்டார்கள் அப்படிப்பட்ட அருமை நாயகம்(ஸல்) அவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது நம்மிடம் இந்த ஒன்றை மட்டுமேக் கேட்டார்கள் அதுவும் உலக வாழ்விற்காக அல்ல, மறுமையின் நிம்மதியான வாழ்வுக்காக பிரார்த்திக்கக் கூறினார்கள். 

அருமை நாயகம்(ஸல்) அவர்களுக்காக மறுமையில் வசீலா எனும் உயர் பதவிக்காக நாம் பிரார்த்திப்பதன் மூலமாக மறுமையில் நமக்கு மிகப்பெரியப் பரிசுக் காத்திருக்கிறது அந்தப் பரிசு மறுமையை உறுதியாக நம்பக் கூடியவர்களுக்கு மிகப்பெரியப் பாக்கியமிக்கதாக இருக்கும்.

அருமை நாயகம்(ஸல்) அவர்களின் வசீஸாவுக்காக அவர்களின் வேண்டுகோளை ஏற்று யார் உலகில் பாங்கின் அழைப்பொலிக்குப் பிறகு தொடர்ந்து பிரார்த்தித்து வந்தாரோ அவருக்காக எந்தப் பரிந்துறையும் பயன் தரமுடியாத இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ்விடம் அருமை நாயகம்(ஸல்) அவர்கள் பரிந்துறை செய்வதாக வாக்களித்துள்ளார்கள்.

இது எத்தனை நன்மைகள் என்று வரையறுத்துக் கூறமுடியாத எல்லையற்ற நன்மையாகும் காரணம் தகிக்கும் வெயிலில் ஒவ்வொருவரும் தன் வியர்வையிலேயே தான் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது வாய்கள் மூடப்பட்டு கால்களும், கைகளும் தனக்கெதிராக சாட்சியமாகிக்கொண்டிருக்கும் கடுமையான நேரத்தில் உதவிக்கான எந்த வழியுமில்லாத அந்த நேரத்தில் அருமை நாயகம்(ஸல்) அவர்கள் நமக்காக வல்ல இறைவனிடம் பரிந்துறை செய்வார்கள் என்றால் இது வiரையறுத்துக் கூறக்கூடிய நன்மையில் உள்ளதா ? இல்லவே இல்லை இது கணக்கிட முடியாத பொக்கிஷக் குவியல்களாகும்.

'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் பாங்கு கூறுபவர் கூறுவதைப் போலவே கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத் கூறுங்கள். என் மீது எவர் ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகிறான். சொர்க்கத்தில் வஸீலா எனும் ஓர் உயர்ந்த பதவி உள்ளது. அந்தப் பதவியை இறைவன் தன் அடியார்களில் ஒருவருக்குத் தான் வழங்க இருக்கிறான். அந்த ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். வஸீலா எனும் அந்தப் பதவி எனக்குக் கிடைக்க எவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 628

பாங்கொலிக்கு பதில் கொடுப்பதில் மட்டும் இத்தனை நன்மைகள் குவிந்து கிடக்கிறதென்றால் அண்ணல் அவர்கள் நமக்கு காட்டித்தந்த வழியில் தொழுது முடித்து பள்ளியை விட்டு வெளியேறும் போது நம்முடைய நன்மையின் எடை என்னவாக இருக்கும் ? என்பதை சிந்தித்தால் எந்த ஒரு பாங்கிற்கும் பதிலளித்து, ஸலவாத் ஓதி, வசீலாவுக்காகப் பிரார்த்திப்பதை தவற விட மாட்டோம். 

மேற்காணும் நன்மையின் பொக்கிஷங்களை மொத்தமாக அடைந்து கொள்வதற்கு தொழுகையாளிகளால் மட்டுமே முடியும். காரணம் தொழுகையாளிகளைத் தவிற தொழாதவருக்கு பாங்கொலியே கடுமையானதாக இருக்கும் பாங்கு சொல்லும் வரை பள்ளிவாசலுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர் பாங்கொலியைக் கேட்டதும் தொழுகை முடியும் வரை பிற தொழுகையாளிகளின் கண்களில் படாதவாறு ஒளிவதற்கு இடத்தைத் தேடி ஓடிவிடுவார். வஸீலாவுக்கு பிரார்த்தித்தவர் கண்டிப்பாக தொழுகைக்கு வந்து விடுவார், வசீலாவுக்குப் பிரார்த்தித்து விட்டு தொழாமல் ஒளிய மாட்டார். 

இன்று தொழுகையாளிகளிலும் கூட சிலர் பாங்கு சொல்வதை ஒருப்பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சை நிருத்தாமல் தொடர்ந்து பேசிக் கோண்டே இருப்பதும், கடைகளில் நின்று பொருள்களை வாங்கிக் கொண்டிருப்பதுமாக இருக்கின்றனர். இது மறுமையில் அடையவிருக்கும் நன்மையை நாமேத் தடுத்துக் கொள்ளக்கூடாது. 

பாங்கிற்கு பதில் சொல்லிவிட்டு, அதன் பிறகு ஸலவாத் ஓதிவிட்டு, அதன்பிறகு கீழ்காணுமாறு வசீலாவுக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்

பொருள்: 'முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!' என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரீ 614.

பாங்கிலிருந்து தொடங்கி தொழுவது முதல் தஸ்பீஹ், துஆ, சுன்னத் தொழுகை என்றுப் பள்ளியை விட்டு வெளியில் வரும்வரை தொழுகைக்கான அமல்கள் நீடிக்கின்றன. அவற்றை முழுமையாக நிறைவு செயது அதற்கான நற்கூலிகளை குறைவின்றி அறுவடை செய்துகொள்ளும் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக ! 

தொழுவதினால் குவியும் இன்னும் ஏராளமான நன்கைளை அல்லாஹ் நாடினால் தொடர்ந்து எழுதுவோம்...


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

2-உளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ  وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ...

5:6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்!...


உளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்.

 
கடந்த முறை பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இவ்வுலக, மற்றும் மறுஉலக வாழ்க்கையின் நன்மைகளைப் பார்த்தோம், தொழுகையாளிகளுக்கு மட்டுமே அது சாத்தியம் என்பதையும் தொழாதவர்களுக்கு அது சாத்தியமில்லை  என்பதையும் அறிந்தோம். இப்பொழுது உளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக வாழ்க்கையின் நன்மைகளைப் பார்ப்போம்.

உலக நன்மை.

பாங்கிற்கு பதிலளித்ததும் தொழுகைக்குத் தயாராவதற்கு முன் உடலில் முக்கியமானப் பகுதிகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்வதே உளூவாகும் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

உளூச் செய்வதற்கு முன் பற்களை துலக்குவது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிமுறைகளில் உள்ளதாகும் அன்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் குச்சியின் நுனிப் பகுதியை மென்று ப்ரஸ் போல் ஆக்கிக் கொண்டு உளூவிற்கு முன் பற்களை நன்றாக துலக்கிக் கொள்வார்கள். அத்துடன் பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது இறைவனின் திருப்தியைப் பெறும் செயல் என்றுக் கூறி மக்களையும் அவ்வாறே செய்வதற்கு ஆர்வமூட்டினார்கள்.

''பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்' எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: நஸயீ 5இ அஹ்மத் 23072

பற்களை துலக்கி சுத்தமாக வைத்துக்கொள்வது இறைதிருப்தியை ஏற்படுத்தும் செயல் என்று சொன்ன ஒரே மார்க்கம் உலகில் இஸ்லாம் மட்டுமே. சொன்ன மாதிரியே அண்ணல் அவர்கள் தங்களுடைய இறுதிகாலம் வரை மரணத்தருவாயிலும் கூட அதைப் பின்பற்றினார்கள்

...நபி(ஸல்) அவர்கள் (கடுமையான நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் மிஸ்வாக்-குச்சியைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்தார்கள். எனவே, நான் அந்தக் குச்சியை எடுத்துமென்று பிறகு அதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கி விட்டேன். என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி. 3100.

அல்லாஹ் திருப்தி அடையும் எந்த செயலிலும் இரட்டிப்பு நன்மைகள், அல்லது பலமடங்கு நன்மைகள், அல்லது பல்கிப் பெருகும் நன்மைகள், அல்லது மரணத்திற்குப் பிறகு தொடரும் நன்மைகள் என்று கொத்துக் கொத்தான நன்மைகள் அடங்கி இருக்கும். 

1400 வருடங்களுக்கு முன் அண்ணல் அவர்கள் பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருக்கும் செயலை அல்லாஹ் திருப்தி அடையும் செயல் என்றுக் கூறி, அதை அன்று அவர்களும் செய்து, மக்களுக்கும் ஏவியது அது இன்று உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு திறனையும் கொண்டுள்ளது என்பதை ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்கினால் 70 சதவிகிதம் இதய நோய் வராது என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.

பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினயதாக  அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி– 888)

அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு முன் பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம், அதேப்போன்று உறங்குவதற்கு முன் செய்யும் உளூவிற்கு முன்பும் பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம். காரணம் இந்த இரண்டு நேரமும் வீட்டிலிருப்போம் என்பதால் அண்ணல் அவர்களின் வழிமுறைப்படி பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம். மருத்துவர்கள் கூறிய இரண்டு முறை என்பது இதில் மட்டுமே அடங்கி விடுகிறது. 

அந்த இரண்டு நேரம் போக மீதி நேரத் தொழுகைளுக்காக செய்யும் உளூவிற்கு முன்பு இயன்றால் பல்துலக்குவோம் அதற்கு இயலவில்லை என்றால் உளூவின்போது விரல்களால் பற்களை தேய்த்து தண்ணீர் விட்டு வாய் கொப்பளிப்போம் இதிலும் சாப்பிட்டப் பின் பற்களின் இடுக்குகளில் தேங்கி நிற்கும் அழுக்குகள் அதிகபட்சம் வெளியாகி விடுவதால் பாரிய இதய நோயிலிருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது. அல்லாஹ்வுக்கு நன்றிக்கூறி அவன் தூதருக்கு ஸலவாத் கூறுவோமாக.  

மறுமைக்கான நன்மைகள்.

உளூச் செய்வதற்கு முன் அண்ணல் அவர்கள் கூறியதுப் போன்று பல்துலக்கி விட்டு அண்ணல் அவர்கள் காட்டித் தந்த வழியில் உளூவை முடித்தப் பின் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரில் அழுக்குடன் சேர்ந்து சிறியப் பாவங்களும் வெளியேறத் தொடங்குகிறது.

ஒரு முஸ்லிமான அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால்இ கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போதுஇ கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித் துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில்இ அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லீம். 412

அண்ணல் அவர்கள் காட்டித் தந்த வழியில் உளூச் செய்து முடித்ததும் கீழ்காணும் இரண்டு வார்த்தைகள் அடங்கிய துஆவைக் கூறவேண்டும்.   

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு

உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)  நூல்: முஸ்லிம் 345

முறையாக உளூச் செய்து முடித்து விட்டு மேற்காணும் இரண்டே இரண்டு வார்த்தைகள் அடங்கிய பிரார்த்தனையைக் கூறினால் உலகில் வாழும் பொழுதே அவருக்காக சொர்க்கத்திற்கான இறைவனின் தீர்ப்பு உறுதியாகி விடுகிறது. அதற்கு இன்னும் உதாரணமாக பிலால் (ரலி) அவர்களின் காலடி ஓசையை சொர்க்கத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டது.

'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்பு சப்தத்தைச் சொர்க்கத்தில் நான் கேட்டேன்' என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) 'இரவிலோஇ பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 1149இ முஸ்லிம் 4497

இத்துடனும் உளூவிற்கான மறுமை நன்மைகள் முடிந்து விடாமல் இன்னும் தொடருகிறது ஒவ்வொரு தொழுகைக்கும் முறையாக உளூச் செய்தவர்களை மறுமையில் ஒளிமயமனாவர்களே ! என்றழைக்கப்பட்டு சங்கை செய்யப்படுவார்கள் என்றும் பெருமானார்(ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) 'நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்' என்றார்கள்'' நுஅய்கி அல் முஜ்மிர் அறிவித்தார். நூல் : புகாரி 136133.  

இலேசான இரண்டு வார்த்தைகள் அடங்கிய பிரார்த்தனைக்கடுத்து இரண்டு, அல்லது விரும்பிய தொழுகையை வீட்டில் தொழுதுவிட்டு பள்ளியை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அவரது கால்கள் தரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை எழுதி ஒருத் தகுதி உயர்த்தப்படுகிறது.

யார் உளூ செய்து அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்;அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான்.... முஸ்லிம் 1159.

சுப்ஹானல்லாஹ் தயாள குணமுடைய கருணையாளன் அல்லாஹ் தன்னை வணங்க வரும் அடியார்களுக்காக பாங்கில் தொடங்கி, உளூச் செய்வதிலிருந்து பள்ளிக்கு நடந்து வரும் வரையில் மட்டுமே மறுமையின் வெற்றிக்காக இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறான் என்றால் பள்ளிக்குள் நுழைந்து அண்ணல் அவர்கள் காட்டித் தந்த முறையில் தொழுது விட்டு வெளியே வரும் பொழுது எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்பதை சிந்தித்தால் ஒருத் தொழுகையையாவது தவற விடுவோமா ?  

வெள்ளிக்கிழமை அல்லாத பிற நாட்களில் ஒரே வரிசை அல்லது அதிகபட்சமாக இரண்டு வரிசையில் தான் பள்ளியில் கூடுகிறோம். 

நிரந்தரமான மறுமை வாழ்வுக்காக உதவக்கூடிய தொழுகையின் மூலம் குவியும் ஏராளமான நன்மைகளை அள்ளிக்கொள்ள ஒவ்வொரு நேரத் தொழுகையாலும் பள்ளியை நிரப்ப மனமில்லாமல் நிரந்தரமில்லாத உலக வாழ்க்கைக்காக உதவக்கூடிய பொருளாதாரக் குவியல்களை அள்ளிக் கொள்வதற்காக அல்லும், பகலுமாய் அல்லாஹ்வை மறந்து அலைகிறோம்.

பொருளாதாரத்தை குவிப்பதற்காக அல்லும், பகலுமாய் அலைவதை இஸ்லாம் ஒருக்காலும் தடுக்கவே இல்லை, மாறாக அதை இஸ்லாம் தூண்டுகிறது. ஆனால் அதனூடே சிறிது நேரத்தை மட்டும் ஒதுக்கி அல்லாஹ்வை தொழுது கொள்ளச் சொல்கிறது இஸ்லாம், பொருளாதாரம் ஈட்டுவதுனூடே தொழுதுகொண்டால் அந்தத் தொழுகை அவர் ஈட்டும் பொருளாதாரத்திலும் ஹராம் கலந்து விடாமல் ஃபில்டர் செய்து ஹலாலாக்குகிறது. இது இரட்டிப்பு நன்மை.

சிந்தியுங்கள் சகோதரர்களே !!!

உலகில் நம் கண் முன்னே நிகழும் நம் கண்ணின் மணியான எத்ததைனையோப் பேரின் மரணத்தை நம்மால் தடுத்து நிருத்த முடிந்திருக்கிறதா ? முடியவில்லை !

அதனால் மறுஉலகில் நமக்கு கொடுக்கப்படுகின்ற தண்டனையை நம்மால் தடுத்துக் கொள்ள முடியுமா ? முடியாது !

அல்லது சிறிய அளவிலேனும் குறைத்துக் கொள்ளவாவது முடியுமா ? அதுவும் கூட முடியாது !

மறுமையில் மிகச் சிறிய தண்டனை என்பதே சூரியன் பிடரிக்கு சமீபத்தில் எரிந்து கொண்டிருக்கும் பொழுது  ஆணியினாலான செருப்பு அணிவிக்கப்பட்டு நிருத்தப்படுவது என்றால் பெரிய தண்டனை எப்படி இருக்கும் ?

சிந்தியுங்கள் சகோதரர்களே !

நிரந்தரமில்லாத உலகில் சிறிது கால இன்பத்திற்கான பொருளாதாரக் குவியலா ?

நிரந்தரமான மறு உலகில் நீண்ட கால நிம்மதிக்காக நன்மையின் குவியலா ?

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் பல்துலக்கி, முறையாக உளூச்; செய்து அதன் மூலம் உலகில் கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தையும், மறுமையில் ஒளிமயமானவர்களாக சுவனத்தின் திறந்த எட்டு வாசல்களில் விரும்பிய வாசலில் நுழையும் நன் மக்களாக நம்மை அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்துஇ அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தித் தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர் (ரலி)  நூல்: முஸ்லிம் (397)

ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்கினால் 70 சதவிகிதம் இதய நோய் வராது என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அறிவித்துள்ளதன் முழுவிபரத்தைப் பார்வையிடுவதற்கு இங்கே சொடுக்கவும். http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/pal_thulakkuthal/

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

3-உலக, மற்றும் மறுமைக்கான இரண்டு நன்மைகள்.

اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

29:45. (முஹம்மதே!) வேதத்திரிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.



தொழுவதினால் ஏற்படும் உலக மறுமைக்கான இரண்டு நன்மைகள்.


உலக, மற்றும் மறுமைக்கான இரண்டு நன்மைகள் அதிகம் அடங்கி இருப்பது இஸ்லாம் கூறும் நற்செயல்களில் தொழுகை என்ற நற்செயலிலாகும்.  

உலகில் வாழும் பொழுது, உள்ளத்தில் அமைதியும் உடலில் ஆரோக்கியமும் ஏற்படுகிறது. மறுமையில் இறைவனை சந்திக்கும் பொழுது எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத இன்ப சுவனபதி பரிசாக கிடைக்கிறது.

உள்ளத்தில் அமைதி.
அல்லாஹ்வை நினைவு கூறுகின்றவர்களுடைய உள்ளம் அமைதிப் பெறுகின்றது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

13:28. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

பள்ளியில் சென்று தொழுதுவிட்டு வெளியில் வருகின்றவர்களுடைய முகம் பிரகாசத்தால் மிண்ணிக் கொண்டிருப்பதை அனுபவ ரீதியாகப் பார்த்திருக்கின்றோம்.

அதற்கு காரணம் இறைவனை தொழுத சந்தோஷத்தில் உள்ளம் அமைதிப் பெறுவதால் அகத்தின் அழகு முகத்தில் (மிண்ணுவது) தெரிகிறது.

சினிமா, ட்ராமா அல்லது இன்னப்பிற மோசமான காட்சிகளைக் கண்டு விட்டு வெளியில் வருகின்றவர்களுடைய முகத்தைப் பார்த்தால் இருள் கவ்விக் கொண்டிருப்பதைக் காணலாம்.

அதற்கு காரணம் பொய்யான, மோசமான, வன்முறையைத் தூண்டக்கூடிய காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற வரையில் ஒருவித ஆவலால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு உடல் தற்காலிக உற்சாகமடைகிறது, அது நிருத்தப்பட்டதும் நரம்பு மண்டலம் சோர்வடைந்தாலும் நீண்ட நேரத்திற்கு  பொய்யான, நடைமுறைக்கு சாத்தியமற்ற, காட்சிகளைக் கண்டதால் உள்ளம் அமைதி இழந்து ஆர்ப்பரித்துக் கொண்டே இருப்பதால் அது முகத்தில் பிரதிபிலிக்கும் பொழுது முகம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.  

  
உடலில் ஆரோக்கியம்.

சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு உள்ளத்தில் அமைதித் தவழ வேண்டும், உள்ளத்தில் அமைதித் தவழ்ந்தால் மட்டுமே இரத்த ஓட்டம் சீராக இருக்கும், இரத்த ஓட்டம் சீராக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், உடல் ஆரோக்கியம் உடையவர்களே இறையருளால் நற்செயல்கள் அதிகம் புரிய முடிகின்றது. நாமும் அனுபவ ரீதியாக இதை உணர்ந்தும் இருக்கிறோம். அதனால் உள்ளத்திற்கு அமைதி தரக் கூடிய தொழுகையை நேரம் தவறாமல் தொழுது கொள்ள வேண்டும்.


நன்னடத்தையும் உடல் ஆரோக்கியமும்.

உலகில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் மக்களில் கடந்த 1972 முதல் 2006 வரை பென்சில்வேனியா பல்கலைகழகத்தின் சமூகநல ஆய்வாளர் கிரிஸ்டோபர் கெய்டில் என்பவர் 423 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் 54 பேர் இறைவழிபாட்டிலிருந்து விலகியவர்கள் என்றும், 96 பேர் சிறந்த இறைவழிபாட்டிற்காக மதம் மாறி இறைவழிபாட்டில் மூழ்கியவர்கள் என்றும் இவ்வாறு இறைவழிப்பாட்டில் மூழ்கிய 96 பேரும் உடல்நலம், மற்றும் நன்நடத்தையில் சிறந்தவர்களாக உள்ளனர் என்பதை தனது ஆய்வில் சமர்ப்பித்திருக்கின்றார். http://www.maalaimalar.com/2010/09/25151629/swant-confident-good-for-body.html

29:45. (முஹம்மதே!) வேதத்திரிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.


தொழுகையில் ஈடுபடுபவர்களை விட்டு தீமைகள் தாமாக விலகிக்கொள்வதால் தான் இறைவழிப்பாட்டில் மூழ்கிய அந்த 96 பேரும் உடல் நலத்துடன் நன்னடத்தை உடையவர்களாக இருந்ததை கிரிஸ்டோபர் கெய்டில் அவர்களின் ஆய்வறிக்கை சான்றுப் பகர்கிறது.


கலப்படமற்ற வணக்கம்.

தொழுகை உள்ளத்தை அமைதியாக வைத்துக்கொண்டு தீயசெயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் கலப்படமற்ற வணக்கத்தை அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டும் அவனுடைய பண்;புகளில் ஒன்றையேனும் யாரிடமும் விட்டு விடக்கூடாது.

39:2. (முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உம்மிடம் நாம் அருளியுள்ளோம். எனவே வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக!


அல்லாஹ்வும் உண்டு, அவ்லியாக்களும் உண்டு என்று கலப்பட நம்பிக்கைக் கொண்டு அல்லாஹ்வை தொழுது விட்டு, அவ்லியாக்களிடம் துஆக் கேட்டால் அது உள்ளத்தை அமைதியாக வைத்துக்கொள்ள அறவே உதவாது. 


ஏன் என்றால் ?


அவ்லியாக்களிடம் செல்பவர்களில் பெரும்பாலானோர் உலகாதாயத்தை எதிர்பார்த்தே செல்கின்றனர் அவர்கள் வேண்டிக்கொண்டவைகள் நினைத்தபடி நடக்கவில்லை என்றால் டென்ஷன் ஏற்பட்டு உள்ளம் அமைதி இழந்து ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது இதன் மூலம் உடல்நலம் பாதிக்கிறது. இதனால் உலகில் நஷ்டம், மறுமையிலோ பெருத்த நஷ்டம்.


தனித்தோன் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்கள் உலகாதாயத்தை எதிர்பார்ப்பதில்லை எதுவாக இருந்தாலும் அல்லாஹ் நாடினால் மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையில் தொழுவதால் எதிர்பார்த்தது நடந்தால் ( வானத்திற்கும், பூமிக்குமாக குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தாமல் ) இறைவனுக்கு நன்றி மட்டும் கூறுவார்கள். எதிர்பார்த்ததற்கு மாற்றமாக நடந்தால் ( ஒரேடியாக துவண்டு சரிந்து விழுந்து விடாமல் ) சகித்துக்கொள்வார்கள் என்று ஏகத்துவ வாதிகளின் சிறந்த பண்பை 1400 வருடங்களுக்கு முன்பே பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


இறைநம்பிக்கையாளனின் அனைத்துக்  காரியங்களும்   நன்மையாக  அமைவது வியப்பாக  உள்ளது. இந்நிலையை இறைநம்பிக்கையாளனைத் தவிர வேறு யாரும் அடைய முடியாது ! அவனுக்கு மகிழ்ச்சி ஏற்;பட்டால் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான் இது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அவனுக்கு துன்பம் ஏறப்பட்டால் அதை சகித்துக் கொள்கிறான். இதுவும் அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக ஸூஹைப் இப்னு ஸினான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இன்பம், துன்பம் இரண்டும் ஏகத்துவவாதிகளுக்கு நடுநிலைத் தன்மையை ஏற்படுத்துவதால் டென்ஷன் ஏற்படுவதில்லை அதனால் உள்ளத்தில் அமைதித் தவழுகிறது. இந்ந நடுநிலைத் தன்மை ஒருவருக்கு வரவேண்டுமென்றால் அவர் தனது வணக்கத்தை அகிலங்களின் அதிபதிhயகிய அல்லாஹ்வுக்கு மட்டும் செலுத்த வேண்டும் அவ்;வாறு செலுத்தினால் ஆற்றல் மிகும் அல்லாஹ் தனது அடியார்களை தீமைகளை நெருங்க விடாமல் தடுத்து விடுவான் அதனால் உடல் நலத்துடனும், நன்னடத்தையுடனும் திகழ முடியும்.


இது தொழுகையாளிகளுக்கு உலக வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய நன்மைகள், மறுமை வாழ்க்கையிலோ உளூவில் தொடங்கி தொழுகை வரையிலான கொத்துக் கொத்தான நன்மைகள் சொர்க்கத்தின் திறவுகோலாக மாறுகிறது.


தொழுகையாகிய சொர்க்கத்தின் திறவுகோல் மூலம் எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத சுவனத்தின் நீண்டதொரு இன்பத்தை அனுபவிக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருன்புரிவானாக !




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

4-அர்ஷின் நிழலில்.

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ {34}  وَأُمِّهِ وَأَبِيهِ {35} وَصَاحِبَتِهِ وَبَنِيهِ {36} لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ {37}

அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். 80:33, 34


 
அர்ஷின் நிழலில்.


இதற்கு முந்தைய தொழுகை சம்மந்தமான கட்டுரைகளில் தொழுவதினால் ஏற்படும் இம்மை மறுமை நன்மைகளை நமக்குத் தெரிந்தவரை பட்டியலிட்டோம் இன்னும் நமக்குத் தெரியாமல் ஏராளமான நன்மைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய அருள்மறைக்குர்ஆனிலும், அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அறிவுப்புகளின் அறிவுச் சுரங்கத்திலும் குவிந்து கிடக்கின்றன.

முதல் அந்தஸ்து

ஒரு நாள் இவ்வுலகம் முழுவதும் உலகில் உள்ள அனைத்து வஸ்த்துகளும் அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போனவர்கள் அனைவரும் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரனை தொடங்கப் படுவதற்கு முன் நிழலில்லாத வெட்ட வெளியில் நிருத்தப்படும் பொழுது தகிக்கும் வெயிலிலும், கொதிக்கும் மணலிலும், பாதங்களை பூமியில் அழுத்தி நிற்க முடியாமல் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருப்பார்கள் அப்பொழுது உலகில் வாழ்ந்த காலத்தில் இறைவனுக்கு மிகவும் விருப்பமான நற்செயல்களில் ஈடுபட்டு வந்த ஏழு பேருக்கு அவன் தன்னுடைய பிரம்மான்டமான அர்ஷின் கீழுள்ள நிலழைக் கொடுத்து அமரச் செய்வான்.

இறைவனின் மிகவும் விருப்பமான அந்த ஏழு நற்செயல்கள். 


நீதியை நிலை நாட்டும் தலைவர்,

அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்,

பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திக்  கொண்டவர்,

அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,

உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோதுஅல்லாஹ்வை அஞ்சுகிறேன் என்றுக் கூறி விலகிக் கொள்பவர்

தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்,

தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்¡ர் சிந்துபவர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஆதார நூல், புகாரி 660.

இறைவனுக்கு மிகவும் விருப்பமான மேற்காணும் ஏழு நற்செயல்களில் இளமையில் இறைவணக்கத்தில் ஈடுபடுவதும், பள்ளிவாசல்களுடன் உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொள்வதும் போன்ற இரண்டு நற்செயல்கள் தொழுகை சார்ந்தவைகளாக  இருப்பதை கவனிக்க வேண்டும்.

இளமைக் குன்றி முதுமைத் தோன்றி.

இளங்கன்று பயமறியாது என்பதுபோல் அதிகமானோர் இளமையில் தான் தன்னையும், தன் சமுதாயத்தையும் அழிவில் ஆழ்த்தும் ஆரோக்கியமற்ற செயல்களில் மூழ்கி அற்ப ஆனந்தமடைவார்கள் படைத்தோனை நினைத்து பள்ளிவாசல் பக்கமே போக மாட்டார்கள். இளமைத் தேய்ந்து முதுமைத் தோன்றியதும் கைத்தடியின் துணையுடன் தட்டுத் தடுமாறி பள்ளிவாசலை நோக்கி நடப்பார்கள். அன்று பள்ளிவாசல்களைப் பார்த்தால் முதியோர் இல்லமா ? பள்ளிவாசலா ? என்று  நினைக்கத் தோன்றும்.

இப்படிப்பட்டவர்களின் மத்தியில் மிகச்சில இளைஞர்களின் முகத்தில் முடிகளின் அரும்பு மலர்வதற்கு முன் உள்ளத்தில் படைத்தோனின் அச்சம் மலர்ந்திருக்கும்.

இப்படிப்பட்ட இறையச்சமுடைய இளைஞர்களே தானும் ஒழுக்கம் பேண வேண்டும், தன்னைப் பார்த்து பிறரும் நல்லொழுக்கம் பேண வேண்டும் என்ற நற்சிந்தனையுடன் நல்லொழுக்கத்திற்கு முன்மாதிரியாகி விடுவார்கள். 

தங்களின் வாழ்க்கைக்குத் தேவையானதை மட்டும் உலக வளங்களில் கவனம் செலுத்துவார்கள், தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை தேவையுடையோருக்கு கொடுத்துதவி மணம் மகிழ்வார்கள்.

வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் இறைவனுக்கு குறைவின்றி இறைவணக்கம் செலுத்துவதுடன், சமுதாயப் பணிகள் புரிவார்கள்.

என்டர்டெயின்மென்ட் என்று இரவுப் பகலாக மூழ்கி இளமையைத் தொழைத்து பல்லையும், சொல்லையும் இழந்து, நரம்புகள் நாட்டியமாடத் தொடங்கியப் பின் பள்ளிவாசலை நோக்கி நடப்பவர்கள் மத்தியில் இதுப் போன்ற இறையச்சமுடைய இளைஞர்களின் இறைவணக்கத்துடன் கூடிய நற்செயல்களே யாரும், யாருக்கும் உதவ முடியாத, தன்னைத் தானேக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத அந்த கடினமான நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழுள்ள நிழலுக்கு இழுத்துச் செல்கிறது. 

பள்ளிவாசலுடனான தொடர்பு

இது போன்ற இறையச்சமுடையவர்களே தொழுது முடித்து பள்ளிவாசலை விட்டு வெளியேறியதும் அடுத்த தொழுகைக்காக பள்ளிவாசலுக்குள் நுழையும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.

ஒருத் தொழுகையிலிருந்து அடுத்த தொழுகையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாலும், ஒரு தொழுகையிலிருந்து அடுத்த தொழுகைக்கு மத்தியில் சிறிது கால இடைவெளியே இருப்பதாலும் இவர்களை பாவகாரியங்களில் தள்ளுவதற்கான கால அவகாசம் ஷைத்தானுக்கு போதுவதில்லை. ஷைத்தானை தூரப் படுத்துவதற்கும் மேற்காணும் இளமையிலான இறையச்சமும், பள்ளிவாசலுடனானத் தொடர்பும் வேலியாக அமைகிறது.

இதுப்போன்ற இறையச்சமுடையவர்கள் பள்ளிவாசலுடன் உள்ளத்தை தொடர்பு படுத்திக்கொள்பவர்கள் மனிதநேயமிக்கவர்களாக இருப்பார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி செலுத்த தவறுவதில்லை, அப்பாவிகளை பாதிப்புக்குள்ளாக்குவதில்லை, ...நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! 5:8 என்ற அல்லாஹ்வின் வாக்கு அநீதி செலுத்துவதிலிருந்து அவர்களை தடுத்து விடுகிறது,

ஷைத்தானின் தோழர்களை தங்களின் நன்பர்களாக்கிக் கொள்ளத் துணிவதில்லை, ஏற்கனவே இருந்தாலும் தாமதமின்றி அல்லாஹ்வுடைய மார்க்கத்தை குறைவின்றி பின்பற்றுவதற்காகவும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காகவும்  உற்ற நண்பர்களாக இருந்தோரில் (இறைவனை) அஞ்சி, நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர (மற்றவர்கள்) அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள். 43:67  என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கை காரணமாக அவர்கள் பிரிந்து விடுவார்கள். 

ஒழுக்கங்கெட்டப் பெண்கள் விரிக்கும் விரச வலையில் வீழ்ந்து விட மாட்டார்கள், வீழ்த்தவும் துணிய மாட்டார்கள் இளமை காலத்தில் இறையச்சத்துடன் இறைவணக்கம் செலுத்துபவர்களை விபச்சாரம் போன்ற கொடிய தீமையிலிருந்து இறைவன் தடுத்து விடுகிறான். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்) இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார். 12:24.  என்று இறைவன் கூறுவது இறையச்சமுள்ள இளைஞர் யூசுப் (அலை) அவர்களைப் பற்றியதாகும் யூசுப் (அலை) அவர்கள் அழகின் பொக்கிஷம் அவர்களின் அழகில் மயங்கிய ராஜகுமாரி விரித்த விரச வலையில் விழாமல் ஓடினாலும் அவள் அவரை விடாமல் விரட்டியதில் விழப் போன யூசுப் (அலை) அவர்களை விழ விடாமல் இறைவன் தாங்கிப்பிடித்தான்.

இதுப்போன்ற இறையச்சமுடையவர்களே பிறருக்கு உதவும் பணிக்காக உலகில் பாராட்டுதலை எதிர்பாராமல் மறுமையின் கூலியை மட்டும் எதிர்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். 2:262. எனும் அல்லாஹ்வின் வாக்கை மதித்து வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்திடுவார்கள்.

தன்னையும் ஏனைய உயிரினங்களையும் உரிய வடிவம் கொடுத்து படைத்து இந்த பூமி என்றக் கோளை வாழ்வதற்கு தேவையான வசதிகளுடன் வடிவமைத்துக் கொடுத்த வல்லோன் அல்லாஹ்வின் பேராற்றலை தனிமையிலும் நினைத்து கண்ணீர் மல்க நன்றி செலுத்துவார்கள்.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. 2:164

அர்ஷின் நிலலை பெற்றுத் தரும் ஏழு நற்செயல்களில் இரண்டு நற்செயல்கள் தொழுகை சார்ந்ததாக இருப்பதால் தொழுகையின் அந்த இரண்டு நற்செயல்கள் மற்ற ஐந்து நற்செயல்களின் பால் இழுத்துச் செல்கிறது இதுவே யாரும் யாருக்கும் உதவ முன் வரமுடியாத அந்த கடினமான வெப்பத்தில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழுள்ள நிழலுக்கு தகுதி உடையவர்களாக ஆக்குகிறது.

அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். 80:33, 34

ஒரு காலத்தில் முதியோர்களாக முதல் ஒரு வரிசையில் மட்டும் நின்று தொழுத காலம் மாறி இன்று அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் தமிழகத்தில் தவ்ஹீத் புரட்சி வெடித்தப் பின் இளைஞர்களால் பள்ளிவாசல்கள் நிறைந்து, பள்ளிவாசலுக்கு வெளியிலும் தொழும் நிலை காணப்படுகிறது அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும்.

தொழுகையைப் பேணுதலுடன் தொழுதும், ஒருத் தொழுகையிலிருந்து அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்திருந்தும், அதன் மூலமாக ஏராளமான தீமைகள் தடுக்கப்படவும், அதன் மூலமாக அல்லாஹ்வின் அர்ஷின் நிழலுக்குப் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக !



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்