வெள்ளி, அக்டோபர் 28, 2011

5-இறைவனைக் காணும் அரும் பாக்கியம்

فَاصْبِرْ عَلَى مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ

'சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!'' (திருக்குர்ஆன் 50:39)


இறைவனைக் காணும் அரும் பாக்கியம்


கடந்த கட்டுரைகளில் தொழுகையாளிகள் மட்டுமே இறைவனின் பேரருளை அடைந்து கொள்ள முடியும், தொழாதவர்களால் அதற்கு அறவே சாத்தியமில்லை என்பதை குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் பார்த்தோம். அதேப்போன்று மறுமையில் தொழுகையாளிகள் மட்டுமே இறைவனைக் கண்குளிரக் காணமுடியும். தொழாதவர்களால் இறைவனையும் காணமுடியாது, மறுமையின் அழைகையும் கண்டு ரசிக்க முடியாது என்பதை இப்பொழுது பார்க்க இருக்கிறோம்.

தொழுகையே மனிதனை பண்பட்டவனாக மாற்றும் பண்பட்ட மனிதனின் பக்குவமான செயல்களே மறுமையில் வெற்றியை ஈட்டித்தரும் என்பதால் அகிலத்தாரிpன் அருட்கொடையான அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பசுமரத்தாணிப் போன்று பதியக்கூடிய பிஞ்சுப் பருவத்தில் குழந்தைகளுக்கு தொழுகையைப் புகுத்தி விடச் சொன்னார்கள்.


தடுப்பூசி ஏன் போடப்படுகிறது ?

குழந்தைப் பிறந்த 9 மாதத்திலிருந்து 12 மாதத்திற்குள் தடுப்பூசிப் போடச் சொல்லி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் தாமதித்தால் குழந்தைகளை அம்மை நோய்கள்; தாக்கும் அபாயம் உருவாகும். அவ்வாறுத் தாக்கினால் கல்லீரல், மண்ணீரலை உடனடியாக செயலிழக்கச் செய்து விடும் என்று மருத்துவர்கள் காரணம் கூறுகின்றனர் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்;ற நல்லெண்ணத்துடனும், பெற்றோர்கள் என்றப் பொறுப்புணர்வுடனும் மருத்துவர்களின் எச்சரிக்கையை ஏற்று குழந்தைகளுக்கு தடுப்பூசியைப் போட்டு விடுகின்றோம்.

இந்த தடுப்பூசியை போடுவதற்கு முன் குழந்தைகளைப் பரிசோதித்தால் அம்மை நோய் இருக்காது, அது வருவதற்கான அறிகுறியும் அறவேத் தெரியாது ஆனால் எப்பொழுது வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது திடீரென வரலாம்.

அது உடலுக்குள் ஊடுறுவத் தொடங்கியதுமே அதிவேகமாக உடலை இயக்கும் முக்கிய உயிரிகளை செயலிழக்கச் செய்து விட்டப் பின்னர் ஹெவிடோஸ் கொடுத்து குணப்படுத்த முடியாது என்பதால் முன்கூட்டியே அவற்றை எதிர்க்கும் திறன் கொண்ட தடுப்பூசிகளை மருத்துவர்கள் போடச் சொல்கின்றனர் இதை அரசாங்கமும் வற்புறுத்துகிறது.

தொழுகையும் இதே போன்றுத்தான் புகுத்த வேண்டியப் பருவத்தில் தொழுகையைப் புகுத்த வில்லை என்றால் வீட்டிற்குள் வைத்திருக்கும் டிவி, இன்டர்நெட், செல்போன் வழியாக மனதை பாதிக்கச் செய்யும் ஆபாச, வன்முறை நிகழ்வுகள் குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் புகுந்து விட்டால் உள்ளம் ரணமாகி விடும் அதன் பின்னர் தொழுகையை புகுத்துவது கடினமாகி விடும்.

12
மாதத்திற்குள் தடுப்பூசிப் போடவில்லை என்றால் அம்மை நோய் எனும் கொல்லை நோய் பிஞ்சு உடலுறுப்புகளை செயலிழக்கச்செய்து குழந்தைகளைப் பிணமாக்கி விடுவது போல் குறிப்பிட்டப் பருவத்தில் தொழுகையைப் புகுத்த வில்லை என்றால் ? டிவி, இன்டர்நெட், செல்போன் வழியாக வரும் ஆபாச, வன்முறை நிகழ்வுகள் மனதை பாதிக்கச் செய்து நடைபிணமாக்கி விடும்.

கொல்லை நோய் என்றழைக்கப்படும் அம்மை நோயை எதிர்க்கும் தடுப்பூசி மருந்தைப் போல் எந்த வழியாகவும் வரும் தீமைகளை உள்ளத்திற்குள் நுழைய விடாமல் எதிர்க்கும் கேடயமாக தொழுகை அமைகிறது என்பது இறைவாக்கு. 29:45. (முஹம்மதே!) வேதத்திரிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

 
எது ஏற்றப் பருவம் ?

எந்த வயதில் உட்கார்ந்து கொண்டு வைத்த கண் வாங்காமல் சினிமாவை ரசித்துப் பார்க்கத் தொடங்குகின்றார்களோ அது தான் தொழுகையைப் புகுத்தும் சரியானப் பருவ காலம்.

தவறினால் அந்த வயதில் உள்ளத்தில் புகுந்து கொள்ளும் ஆபாசங்களும், வன்முறை நிகழ்வுகளும் சிறுகச் சிறுக மனநிலையை பாதிப்படையச் செய்து அவன் இளைஞனாக ஆகும் பொழுது மொத்த உள்ளமும் சீழ்படிந்து விடும்.

முழவதுமாக சீழ்படிந்த உள்ளம் உயர்ந்த போதனைகளை உள் வாங்க மறுத்து அவற்றை ஒரு செவியிலிருந்து இன்னொரு செவி வழியாக வெளியே தள்ளிக் கொண்டிருக்கும்.

அதனால் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு ஷைத்தான் காட்டிய தவறான வழியில் பொண்ணாசைப் பொருளாசையால் மூழ்கியவன் மரணிக்கும் பொழுது மூடிய அவனது கண்கள் மறுமையில் திறக்காமல் உடல் மட்டுமே எழுந்து நிற்கும்.

உலகில் வாழும்பொழுது அல்லாஹ் என்றும், அருள்மறைக்குர்ஆன் என்றும், இறுதித் தீர்ப்பு நாள் என்றும் கூறக்கேட்டதை வைத்து இது தான் இறுதித் தீர்ப்பு நாள் என்று உணர்ந்து கொள்வான்.

உலகில் வாழும்பொழுது இறைவனை மறந்தவன் அங்கே என் இறைவனே ! என்றழைப்பான். என் பார்வை எங்கே ? ஏன் என்னை குருடனாக எழுப்பினாய் ? என்றுக் கதறுவான், கூக்குரல் எழுப்புவான்.


20: 124. எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.


20: 125. ''
என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?'' என்று அவன் கேட்பான்.


20: 126. ''
அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான்.


இறைவனை நினைவு கூறுபவர்களை இறைவனும் இம்மையிலும், மறுமையிலும் நினைவு கூறுவான் மறக்க மாட்டான் மறதி அவனுக்கு இல்லை.

வேண்டுமென்றே அவனுடைய உபதேசங்களை புறக்கனிப்பவர்களை மட்டும் இம்மையிலும், மறுமையிலும் (வேண்டுமென்றே விட்டு விடுவான்); மறப்பான்.

இறைவனை மட்டுமல்லாது எவருடைய கண்களும் கண்டிராத, காதுகளும் கேட்டிராத மறுமையின் இன்பங்களில் எந்த ஒன்றையுமே மறுமையில் அவனால் காணமுடியாத அவலநிலை ஏற்படும்.
 
பவுர்ணமி நிலவைப்போல்.

உலகில் வாழும்பொழுது ஏகஇறைவனின் போதனைகளை ஏற்று அவனுக்கு சிரம்பணிந்து அவனது கட்டளைகளுக்கு உட்பட்டு தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் மரணிப்பதற்கு முன் விபத்துகள், அல்லது நோய் போன்றவற்றால் கண்களை இழந்திருந்தாலும் மறுமையில் பார்வையுடன் எழுவார்கள்.

அவர்கள் ஏகஇறைனை பவுர்ணமி நிலவைப்போல் தங்களின் இருக் கண்களாலும் கண்டு களிப்பார்கள் என்றுப் பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்போது அவர்கள் முழுநிலவை நோக்கி 'இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதுபோல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் (மறுமையில்) காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும், சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்! என்றுக்கூறி விட்டு, 'சூரியன் உதிக்கும் முன்னரும், மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத்துதிப்பீராக! (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள். புகாரி. 554. ஜரீர்(ரலி) அறிவித்தார்.


இறைவணக்கத்திற்காக விழித்தக் கண்கள் ஒருப் போதும் மூடவே மூடாது, மறுமையில் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டு தனது இறைவனையும், சுவனத்தின் வனப்பையும் கண்டு களித்துக் கொண்டிருக்கும்.
மறுமையில் இறைவனைக் கண்குளிர காணும் அரும்பாக்கியம் தொழுகையாளிகளுக்கு மட்டுமேக் கிடைக்கும்.

தொழாதவர்களுக்கு மறுமையில் கண்களை இழந்து இறைவனைக் காண முடியாத துர்பாக்கிய நிலையே ஏற்படும்.

மேற்காணும் துர்பாக்கிய நிலை நமக்கு ஏற்படாமல் ஒளிமயமிக்க இறைவனை நமது உடல் உறுப்புகளிலேயே அருட்கொடையாக அமையப் பெற்ற கண்களால் கண்டு களிக்கும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக !

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்