يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ...
5:6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்!...
உளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்.
கடந்த முறை பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இவ்வுலக, மற்றும் மறுஉலக வாழ்க்கையின் நன்மைகளைப் பார்த்தோம், தொழுகையாளிகளுக்கு மட்டுமே அது சாத்தியம் என்பதையும் தொழாதவர்களுக்கு அது சாத்தியமில்லை என்பதையும் அறிந்தோம். இப்பொழுது உளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக வாழ்க்கையின் நன்மைகளைப் பார்ப்போம்.
உலக நன்மை.
பாங்கிற்கு பதிலளித்ததும் தொழுகைக்குத் தயாராவதற்கு முன் உடலில் முக்கியமானப் பகுதிகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்வதே உளூவாகும் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.
உளூச் செய்வதற்கு முன் பற்களை துலக்குவது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிமுறைகளில் உள்ளதாகும் அன்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் குச்சியின் நுனிப் பகுதியை மென்று ப்ரஸ் போல் ஆக்கிக் கொண்டு உளூவிற்கு முன் பற்களை நன்றாக துலக்கிக் கொள்வார்கள். அத்துடன் பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது இறைவனின் திருப்தியைப் பெறும் செயல் என்றுக் கூறி மக்களையும் அவ்வாறே செய்வதற்கு ஆர்வமூட்டினார்கள்.
''பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்; இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்' எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: நஸயீ 5இ அஹ்மத் 23072
பற்களை துலக்கி சுத்தமாக வைத்துக்கொள்வது இறைதிருப்தியை ஏற்படுத்தும் செயல் என்று சொன்ன ஒரே மார்க்கம் உலகில் இஸ்லாம் மட்டுமே. சொன்ன மாதிரியே அண்ணல் அவர்கள் தங்களுடைய இறுதிகாலம் வரை மரணத்தருவாயிலும் கூட அதைப் பின்பற்றினார்கள்
...நபி(ஸல்) அவர்கள் (கடுமையான நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் மிஸ்வாக்-குச்சியைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்தார்கள். எனவே, நான் அந்தக் குச்சியை எடுத்துமென்று பிறகு அதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கி விட்டேன். என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி. 3100.
அல்லாஹ் திருப்தி அடையும் எந்த செயலிலும் இரட்டிப்பு நன்மைகள், அல்லது பலமடங்கு நன்மைகள், அல்லது பல்கிப் பெருகும் நன்மைகள், அல்லது மரணத்திற்குப் பிறகு தொடரும் நன்மைகள் என்று கொத்துக் கொத்தான நன்மைகள் அடங்கி இருக்கும்.
1400 வருடங்களுக்கு முன் அண்ணல் அவர்கள் பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருக்கும் செயலை அல்லாஹ் திருப்தி அடையும் செயல் என்றுக் கூறி, அதை அன்று அவர்களும் செய்து, மக்களுக்கும் ஏவியது அது இன்று உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு திறனையும் கொண்டுள்ளது என்பதை ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்கினால் 70 சதவிகிதம் இதய நோய் வராது என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.
பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினயதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி– 888)
அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு முன் பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம், அதேப்போன்று உறங்குவதற்கு முன் செய்யும் உளூவிற்கு முன்பும் பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம். காரணம் இந்த இரண்டு நேரமும் வீட்டிலிருப்போம் என்பதால் அண்ணல் அவர்களின் வழிமுறைப்படி பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம். மருத்துவர்கள் கூறிய இரண்டு முறை என்பது இதில் மட்டுமே அடங்கி விடுகிறது.
அந்த இரண்டு நேரம் போக மீதி நேரத் தொழுகைளுக்காக செய்யும் உளூவிற்கு முன்பு இயன்றால் பல்துலக்குவோம் அதற்கு இயலவில்லை என்றால் உளூவின்போது விரல்களால் பற்களை தேய்த்து தண்ணீர் விட்டு வாய் கொப்பளிப்போம் இதிலும் சாப்பிட்டப் பின் பற்களின் இடுக்குகளில் தேங்கி நிற்கும் அழுக்குகள் அதிகபட்சம் வெளியாகி விடுவதால் பாரிய இதய நோயிலிருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது. அல்லாஹ்வுக்கு நன்றிக்கூறி அவன் தூதருக்கு ஸலவாத் கூறுவோமாக.
மறுமைக்கான நன்மைகள்.
உளூச் செய்வதற்கு முன் அண்ணல் அவர்கள் கூறியதுப் போன்று பல்துலக்கி விட்டு அண்ணல் அவர்கள் காட்டித் தந்த வழியில் உளூவை முடித்தப் பின் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரில் அழுக்குடன் சேர்ந்து சிறியப் பாவங்களும் வெளியேறத் தொடங்குகிறது.
ஒரு முஸ்லிமான அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால்இ கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போதுஇ கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித் துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில்இ அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லீம். 412
அண்ணல் அவர்கள் காட்டித் தந்த வழியில் உளூச் செய்து முடித்ததும் கீழ்காணும் இரண்டு வார்த்தைகள் அடங்கிய துஆவைக் கூறவேண்டும்.
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு
உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் 345
முறையாக உளூச் செய்து முடித்து விட்டு மேற்காணும் இரண்டே இரண்டு வார்த்தைகள் அடங்கிய பிரார்த்தனையைக் கூறினால் உலகில் வாழும் பொழுதே அவருக்காக சொர்க்கத்திற்கான இறைவனின் தீர்ப்பு உறுதியாகி விடுகிறது. அதற்கு இன்னும் உதாரணமாக பிலால் (ரலி) அவர்களின் காலடி ஓசையை சொர்க்கத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டது.
'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்பு சப்தத்தைச் சொர்க்கத்தில் நான் கேட்டேன்' என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) 'இரவிலோஇ பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 1149இ முஸ்லிம் 4497
இத்துடனும் உளூவிற்கான மறுமை நன்மைகள் முடிந்து விடாமல் இன்னும் தொடருகிறது ஒவ்வொரு தொழுகைக்கும் முறையாக உளூச் செய்தவர்களை மறுமையில் ஒளிமயமனாவர்களே ! என்றழைக்கப்பட்டு சங்கை செய்யப்படுவார்கள் என்றும் பெருமானார்(ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.
பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) 'நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்' என்றார்கள்'' நுஅய்கி அல் முஜ்மிர் அறிவித்தார். நூல் : புகாரி 136ஃ133.
இலேசான இரண்டு வார்த்தைகள் அடங்கிய பிரார்த்தனைக்கடுத்து இரண்டு, அல்லது விரும்பிய தொழுகையை வீட்டில் தொழுதுவிட்டு பள்ளியை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அவரது கால்கள் தரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை எழுதி ஒருத் தகுதி உயர்த்தப்படுகிறது.
யார் உளூ செய்து அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்;அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான்.... முஸ்லிம் 1159.
சுப்ஹானல்லாஹ் தயாள குணமுடைய கருணையாளன் அல்லாஹ் தன்னை வணங்க வரும் அடியார்களுக்காக பாங்கில் தொடங்கி, உளூச் செய்வதிலிருந்து பள்ளிக்கு நடந்து வரும் வரையில் மட்டுமே மறுமையின் வெற்றிக்காக இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறான் என்றால் பள்ளிக்குள் நுழைந்து அண்ணல் அவர்கள் காட்டித் தந்த முறையில் தொழுது விட்டு வெளியே வரும் பொழுது எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்பதை சிந்தித்தால் ஒருத் தொழுகையையாவது தவற விடுவோமா ?
வெள்ளிக்கிழமை அல்லாத பிற நாட்களில் ஒரே வரிசை அல்லது அதிகபட்சமாக இரண்டு வரிசையில் தான் பள்ளியில் கூடுகிறோம்.
நிரந்தரமான மறுமை வாழ்வுக்காக உதவக்கூடிய தொழுகையின் மூலம் குவியும் ஏராளமான நன்மைகளை அள்ளிக்கொள்ள ஒவ்வொரு நேரத் தொழுகையாலும் பள்ளியை நிரப்ப மனமில்லாமல் நிரந்தரமில்லாத உலக வாழ்க்கைக்காக உதவக்கூடிய பொருளாதாரக் குவியல்களை அள்ளிக் கொள்வதற்காக அல்லும், பகலுமாய் அல்லாஹ்வை மறந்து அலைகிறோம்.
பொருளாதாரத்தை குவிப்பதற்காக அல்லும், பகலுமாய் அலைவதை இஸ்லாம் ஒருக்காலும் தடுக்கவே இல்லை, மாறாக அதை இஸ்லாம் தூண்டுகிறது. ஆனால் அதனூடே சிறிது நேரத்தை மட்டும் ஒதுக்கி அல்லாஹ்வை தொழுது கொள்ளச் சொல்கிறது இஸ்லாம், பொருளாதாரம் ஈட்டுவதுனூடே தொழுதுகொண்டால் அந்தத் தொழுகை அவர் ஈட்டும் பொருளாதாரத்திலும் ஹராம் கலந்து விடாமல் ஃபில்டர் செய்து ஹலாலாக்குகிறது. இது இரட்டிப்பு நன்மை.
சிந்தியுங்கள் சகோதரர்களே !!!
உலகில் நம் கண் முன்னே நிகழும் நம் கண்ணின் மணியான எத்ததைனையோப் பேரின் மரணத்தை நம்மால் தடுத்து நிருத்த முடிந்திருக்கிறதா ? முடியவில்லை !
அதனால் மறுஉலகில் நமக்கு கொடுக்கப்படுகின்ற தண்டனையை நம்மால் தடுத்துக் கொள்ள முடியுமா ? முடியாது !
அல்லது சிறிய அளவிலேனும் குறைத்துக் கொள்ளவாவது முடியுமா ? அதுவும் கூட முடியாது !
மறுமையில் மிகச் சிறிய தண்டனை என்பதே சூரியன் பிடரிக்கு சமீபத்தில் எரிந்து கொண்டிருக்கும் பொழுது ஆணியினாலான செருப்பு அணிவிக்கப்பட்டு நிருத்தப்படுவது என்றால் பெரிய தண்டனை எப்படி இருக்கும் ?
சிந்தியுங்கள் சகோதரர்களே !
நிரந்தரமில்லாத உலகில் சிறிது கால இன்பத்திற்கான பொருளாதாரக் குவியலா ?
நிரந்தரமான மறு உலகில் நீண்ட கால நிம்மதிக்காக நன்மையின் குவியலா ?
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் பல்துலக்கி, முறையாக உளூச்; செய்து அதன் மூலம் உலகில் கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தையும், மறுமையில் ஒளிமயமானவர்களாக சுவனத்தின் திறந்த எட்டு வாசல்களில் விரும்பிய வாசலில் நுழையும் நன் மக்களாக நம்மை அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !
ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்துஇ அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தித் தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் (397)
ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்கினால் 70 சதவிகிதம் இதய நோய் வராது என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அறிவித்துள்ளதன் முழுவிபரத்தைப் பார்வையிடுவதற்கு இங்கே சொடுக்கவும். http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/pal_thulakkuthal/
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்